கடலில் கிடைக்கும் அரிய உலோகம்!

இன்றைய தேதிக்கு, லித்தியம் மிக கிராக்கிஉள்ள உலோகம். ஆஸ்திரேலியா, சிலி, சீனா உள்ளிட்ட, எட்டு நாடுகளில் மட்டுமே லித்தியம் கிடைக்கிறது. எனவே தான் லித்தியத்திற்கு மவுசு.இத்தனை மவுசுள்ள ஒரு உலோகம், கடலில் பல கோடி டன்கள் கொட்டிக் கிடக்கிறது என்பது தான் ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம், கடல் நீரிலிருந்து லித்தியத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் அண்மையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
லித்தியம் லாந்தானம் டைட்டானியம் ஆக்சைடு (எல்.எல்.டி.ஓ.,) என்ற பொருளால் உருவாக்கப்பட்ட ஒரு வடிகட்டியின் வழியே, கடல் நீரையும், மின்சாரத்தையும் செலுத்தி, சில வேதி வினைகளால் லித்தியம் பாஸ்பேட்டை பிரித்தெடுக்கும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை, 'எனர்ஜி அண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம், கடல் நீரிலிருந்து, 1 கிலோ லித்தியம் எடுக்க வெறும், 367 ரூபாய் தான் செலவாகிறது என கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேதிவினையின் போதே, பக்கவிளைவாக, 0.87 கிலோ ஹைட்ரஜன் வாயு, 31 கிலோ குளோரின் வாயு ஆகியவையும் கிடைக்கும். இவற்றின் சந்தை மதிப்பு முறையே, 506 மற்றும் 858 ரூபாய்.இவை எல்லாவற்றையும்விட, கடல் நீரை எடுத்து, அதிலிருந்து லித்தியத்தை பிரித்ததும் மிஞ்சக் கூடியது, துாய்மையான நீர். ஆம், கடல் நீரை குடிநீராக்கும் முறையும் இதே தொழில்நுட்பத்தோடு இலவசமாக வருகிறது. எனவே, அரபு உள்ளிட்ட பல நாடுகள் இத்தொழில்நுட்பத்தின் மீது கண் வைத்துள்ளன

Google+ Linkedin Youtube