அவசியம் தேவை ‘அவசரகால நிதி’

முக்கியமாக பணமுடக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்க, மக்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு பணமின்றி அவதிப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடிகள் மீண்டும் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் ‘எமர்ஜென்சி பண்ட்’ எனப்படும் அவசரகால நிதியை தங்கள் குடும்பத்திற்காக சேர்த்துவைத்துக் கொள்ளவேண்டும். இன்றைய கல்லூரி மாணவர்களில் பெரும் பாலானவர்கள் ‘படித்து முடித்ததும் எனக்கு ஒரு வேலை மட்டும் கிடைத்துவிட்டால்போதும். அப்புறம் பாரு என் வாழ்க்கையை ராஜா போன்று வாழ்வேன்’ என்று அடிக்கடி கூறுவார்கள். படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின்பு சம்பாதிக்கும் பணத்தை இஷ்டத்துக்கு செலவு செய்து ஜாலியாக வாழவேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்கிறது. கொண்டாட்டமும், கும்மாளமும்தான் வாழ்க்கை என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.
இளைஞர்களின் அத்தகைய எண்ணத்தை கொரோனா தலைகீழாக மாற்றியிருக்கிறது. இன்றைய சூழ்நிலை அவர்களை பலவாறாக சிந்திக்கவைத்திருக்கிறது. இது போன்ற நெருக்கடிகள் எதிர்காலத்திலும் 
எப்போது வேண்டுமானாலும் திடீரென்று வரலாம். இன்று என்ன செய்வ தென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நிற்கிறோம். எதிர்காலத்திலும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க ‘எமர்ஜென்சி பண்ட்’ மிக அவசியம். இளைஞர்கள் வேலையில் சேர்ந் ததும் முதன் முதலில் அவசர கால நிதிக்கு பணம் சேமிக்கவேண்டும். அந்த பணம் திடீர் நெருக்கடிகள் ஏற்படும்போது அவர்கள் வாழ்க்கையை இயல்பாக நடத்த உதவும். சில மாதங்கள் சம்பளம் வராத சூழ்நிலை ஏற்பட்டால் அத்தியாவசிய கடன்களை செலுத்தவும், சிகிச்சைக்காக செலவிடவும், குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தவும் அது உதவும். குறைந்தது ஆறு மாத செலவினங்களுக்கு போதுமான அளவு பணம் அவசரகால நிதிக்கு அவசியம். அந்த அளவுக்கு நீங்கள் பணத்தை சேமித்துவைத்துக்கொண்டால், நெருக்கடியான காலகட்டத்திலும் உங்களுக்கு தன்னம்பிக்கை குறை யாது. தைரியமாக நீங்கள் அந்த நெருக்கடியை எதிர்கொள்வீர்கள்.
உங்களுக்கு மாதம் பல்வேறு செலவுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், நீங்கள் ஆறுமாதங்களை அவசரகாலமாக கருதவேண்டும். அவசரகால நிதியாக நீங்கள் 3 லட்சம் ரூபாய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவ்வளவு பணத்தை உங்களால் ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடியாது என்றால், முடிந்த அளவு உங்கள் அன்றாட செலவுகளை குறைத்து அவசர கால நிதியை விரைவாக சேருங்கள். மூன்று லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் சேர்ந்த பின்பு, உங்கள் அன்றாட செலவினங்களை சற்று அதிகரித்துக்கொள்ளலாம். எப்போதுமே வேலைக்கு சேர்ந்ததும் பணத்தை சேமிப்பது எளிது. 
மாத சம்பளத்தை வாங்கி இஷ்டத்துக்கு செலவு செய்ய ஆரம்பித்த பின்பு அதை கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். அத னால் முதல் சம்பளத்தில் இருந்து அவசரகால நிதியை சேருங்கள். நீங்கள் அவசரகால நிதி சேமிக்காவிட்டால் என்ன பிரச்சினைகள் தோன்றும்? அவசர தேவைக்கு நீங்கள் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பணம் கடன் கேட்கவேண்டியதிருக்கும். எல்லோருமே அந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால், எளிதாக கடன் கிடைக்காது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்காதபோது மனக்கசப்பு உருவாகும்.

Google+ Linkedin Youtube