அதிகரிக்கும் மின் கழிவுகள்

தற்போது பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களை விட சிறந்த ‘அப்டேட்’களுடன் வெளிவரும் புதிய பொருட்களை நாடுவதும் எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. 2019-ம் ஆண்டு உலக அளவில் 53.6 மில்லியன் மெட்ரிக் டன் மின் கழிவுகள் தேங்கி இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் உலகளாவிய மின் கழிவு கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆசியாவில்தான் மின் கழிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதாவது மொத்த கழிவுகளில் 24.9 மெட்ரின் டன் ஆசியாவில்தான் குவிந்திருக்கிறது. இதில் சீனாவில் மட்டும் 10.1 மில்லியன் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 3.2 மில்லியன் டன் மின் கழிவுகள் குப்பைக்கு சென்றிருக்கின்றன. 
அமெரிக்காவில் 13.1 மில்லியன் டன் கழிவுகள் குவிந்திருக்கிறது.உலகில் உள்ள மொத்த மின் கழிவுகளில் 38 சதவீதம் இந்த மூன்று நாடுகளில் இருந்துதான் பெறப்படுகின்றன. ஐரோப்பாவில் 12 மில்லியன் டன் மின் கழிவுகள் சேருகின்றன. இந்த மின் கழிவுகளில் 17 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதேநிலை தொடர்ந்தால் 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரானிக் கழிவுகள் 74 மில்லியன் டன்களை எட்டிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். எலக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு சில நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் கழிவுகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யும்போது காற்றில் நச்சு 
புகைகள் கலக்கும் நிலை இருக்கிறது. இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் முறையாக மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய நிலையும்  ஏற்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube