16-ஆவது தமிழக சட்டப்பேரவையில் வயது மூத்த எம்எல்ஏக்கள் அதிகம்; பெண் எம்எல்ஏக்கள் குறைவு!

16-ஆவது தமிழக சட்டப்பேரவையில் வயது மூத்த எம்எல்ஏக்கள் அதிகம்; பெண் எம்எல்ஏக்கள் குறைவு!

அமையவுள்ள 16-ஆவது தமிழக சட்டப்பேரவையில் முந்தைய மன்றத்தில் இருந்ததை விட வயது மூத்த எம்.எல்.ஏக்கள் அதிகமாகவும், பெண் எம்.எல்.ஏக்கள் குறைவாகவும் இடம் பெறவுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் கிட்டத்தட்ட இரு நாட்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பேரவை உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சில தகவல்கள் தெரிய வந்துள்ளன.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 21 பெண் எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை 12 பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே இடம் பெறவுள்ளனர். மொத்த சதவீதம் ஒன்பதில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.70 வயதுக்கும் மேலான மிக மூத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் 2016 ஆம் ஆண்டை விட தற்போது சற்று கூடியுள்ளது.

கடந்த முறை 1 சதவீதமாக இருந்த மிக மூத்த எம்.எல்.ஏக்கள் இம்முறை 6 சதவிகிதமாக அதிகரித்துள்ளனர். 2016 இல் இரண்டாக இருந்த 70 வயதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இந்த முறை 15 ஆக அதிகரித்துள்ளது.

41 முதல் 56 வரையிலான வயது வரம்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் சதவிகிதம் 2016 ஆம் ஆண்டு பேரவையில் 46 ஆக இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு பேரவையில் 44 ஆக குறைந்துள்ளது. ஆனால் 56 முதல் 70 வரையிலான வயது வரம்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் சதவிகிதம் 43 இலிருந்து 44 ஆக அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட 50 சதவிகித எம்.எல்.ஏக்கள், அமையவுள்ள 16 ஆவது சட்டப்பேரவையில் 56 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இளநிலை பட்டதாரி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவையில் இருந்ததை விட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதாவது இளநிலை பட்டதாரி எம்.எல்.ஏக்களின் சதவிகிதம் 59 இலிருந்து 62 ஆக அதிகரித்துள்ளது. முதுநிலை பட்டதாரி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 27 சதவிதிகிதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே போல் பள்ளிப்படிப்பு வரை முடித்துள்ள எம்.எல்.ஏக்களின் சதவிகிதம் 41 இலிருந்து 38 ஆக குறைந்துள்ளது. காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக பொதுச் செயலாளர் துரை முருகனே அமையவுள்ள சட்டப்பேரவையில் மிக மூத்த எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube