மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா மீண்டும் முதல் இடம்

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. இவ்விறு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் அடங்கிய டி-20 தொடரில் இரண்டு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட்டிற்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் 17 வயது தொடக்க ஆட்டக்காரர் ஷெஃபாலி வர்மா முதலிடம் பிடித்துள்ளார். கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷெஃபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் இந்த ஆண்டு முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஷெஃபாலி இதுவரை 21 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2 அரை சதங்களுடன் 144.30 ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். சமீபத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களில் 23, 47 என ரன்கள் எடுத்தார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 ஆட்டங்களில் 163 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Google+ Linkedin Youtube