மராட்டியம், குஜராத் மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாப்பின் முக்கிய மாவட்டங்களில் இரவு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுகிறது.

நாட்டில் கடந்த ஆண்டு முழுவதும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்புகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டது.  எனினும், கோடை கால தொடக்கத்தில் இதன் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.  இதுதவிர, மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மராட்டியத்தின் மும்பை நகரில் நாளொன்றுக்கு 1,700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,500க்கும் கூடுதலாக காணப்படுகிறது.  மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3.18 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.  

இதேபோன்று, மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23.29 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.  இதனை முன்னிட்டு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு நிர்வாகமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.

மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என்று அரசு முடிவு செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.  இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது.

ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான பால் பூத், காய்கறி, பழம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டன.

பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.  இதனால் வாகன போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஒரு வார கால ஊரடங்கை முன்னிட்டு நாக்பூர் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாகனங்களில் வெளியே வருவோரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் போலீசார் காரணங்களை கேட்டறிந்த பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்குகின்றனர்.

இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.7 லட்சத்திற்கும் கூடுதலாக உயர்ந்து காணப்படுகிறது.  4 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2.69 லட்சம் அளவில் உள்ளது ஆறுதல் அளிக்கிறது.  குணமடைந்தோர் சதவீதம் 96.72 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  குஜராத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை முன்னிட்டு தொற்றை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, மார்ச் 17ந்தேதி (நேற்று) முதல் மார்ச் 31ந்தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஆமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று பஞ்சாப்பின் முக்கிய நகரங்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப்பின் லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, மொகாலி, அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஹோசியார்பூர், கபுர்தலா மற்றும் ரோபர் ஆகிய மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

எனவே, இந்த மாவட்டங்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிவரையில் இருந்து வந்த ஊரடங்கை, இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணிவரை மாற்றி அமல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

Google+ Linkedin Youtube