அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் வீடு, இலவச வாஷிங்மிஷின், வீடு தேடி ரேஷன் பொருள் உள்ளிட்ட சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 6 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய 6 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ரூ.1,500

கடந்த 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், “மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும், குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்ப தலைவியிடம் வழங்கப்படும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களின் மனம் நிறைவு பெரும் விதத்தில் அறிவிப்புகள் இருக்கும்” என்று அறிவித்தார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

இந்த நிலையில், அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கையை, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அம்மா இல்லம் திட்டம்

 1. குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகர் பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்குமாடி
 2. வீடுகள் கட்டி  அம்மா இல்லம் திட்டம்” மூலமாக விலையில்லாமல் வழங்கப்படும்.
 3. சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத்தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.

50 சதவீதகட்டண சலுகை

 • நகர பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு பஸ் கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்.
 • பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாக சென்று வழங்கப்படும்.
 • விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும்.
 • அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
 • பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்.
 • மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்க கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
 • கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2 ஜி.பி. டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

இருசக்கர வாகனம் வாங்க மாணவிகளுக்கு மானியம்

 • உலகளவில் புகழ்பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிஜ், எம்.ஐ.டி. போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்.
 • அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
 • யு.பி.எஸ்.சி., நீட், ஐ.ஐ.டி.-ஜெ.இ.இ., டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், உயர்தர பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.
 • அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதியாக வழங்கப்படும்.

ஓய்வூதியம்ரூ.2 ஆயிரமாக உயர்வு

 • சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
 • திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அம்மா சீர்வரிசை பரிசு வழங்கப்படும்.
 • திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு வழங்கப்பட்டு வரும் தங்கத்தோடு, பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரமாகவும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் ரூ.35 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
 • அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

2 கொசுவலைகள் வழங்கப்படும்

 • நலிந்த மக்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கொசுவலைகள் வழங்கப்படும்.
 • மத்திய அரசு பணியாளர் தேர்வுகளில், மையப்படுத்துதல் தேர்வு முறைக்கு பதிலாக, மாநில ரீதியான தேர்வு முறையை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து, மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திட, மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.
 • இந்திய அரசின் ஆட்சி மொழியாக உயர்தனி ஆதிமொழியான தமிழ் மொழியினை அறிவித்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசினை அ.தி.மு.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.
 • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக்கபடும்.
 • வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க தமிழ்நாடு அரசு “தனித்துறை” அமைத்திட நடவடிக்கை எடுக்கும்.
 • சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இருமொழி கொள்கை தொடரும்

 • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, சென்னை ஐகோர்ட்டு என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட மைய அரசை வலியுறுத்துவோம்.
 • இருமொழி கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
 • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • மத்திய அரசு போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.
 • தமிழரின் தொன்மையை பறைசாற்றும் சிவகங்கை மாவட்டம் - கீழடி, தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகலை, ஈரோடு மாவட்டம் - கொடுமணல், அரியலூர் மாவட்டம் - கங்கைகொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் - பட்டறை பெரும்புதூர், ராமநாபுரம் மாவட்டம் - அழகன்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் - மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குடியிருப்பு அனுமதி

 • மத்திய அரசு தாமதமின்றி, உடனடியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தக்க ஆணையிட வேண்டுமென்று அ.தி.மு.க. உணர்வு பூர்வமாக தொடர்ந்து வலியுறுத்தும்.
 • இந்திய வாழ் இலங்கை தமிழ் அகதிகளுக்கு “இரட்டை குடியுரிமை” மற்றும் “குடியிருப்பு அனுமதி” வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
 • விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்.
 • மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

 • பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய பாதிப்பில் இருந்து மக்களுக்கு உதவிட பெட்ரோல், டீசல் விலையினை குறைத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கனிசமாக குறைத்திட மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.
 • அங்கன்வாடி குழந்தைகளுக்கும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என அனைத்து நிலை மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி. பால் / பால் பவுடர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

பால் விலை குறைக்கப்படும்

 • நுகர்வோர்களின் நலன் கருதி பால் விற்பனை விலை ரூ.2 குறைக்கப்படும்.
 • ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண், பெண் ஓட்டுநர்களின் வளமான வாழ்விற்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் “எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ” வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
 • தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் படிப்படியாக மதுபான கடைகள் மூடப்படும்.
 • கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கடன்பெற்று வீடுகட்டியவர்களின் நிலுவைக்கடன் மற்றும் அடமானக் கடனை ஒரே தவணை என்ற அடிப்படையில் கடன் தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
 • மதுரை விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கர் பெயர் சூட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்க மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

மகப்பேறு விடுப்பு உயர்வு

 • பெண் அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பை கருத்தில் கொண்டு, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்தில் இருந்து ஒரு வருடமாக உயர்த்தப்படும்.

Google+ Linkedin Youtube