பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகை தமன்னா, நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தனர்.

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆஷிஷ் வித்யார்த்தி தமிழில் பாபா, ஏழுமலை, பகவதி, தமிழன், ஈ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை ஆஷிஷ் வித்யார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இது நான் விரும்பாத ஒன்று. நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், “டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். நலமாக உள்ளேன்” என்றும் கூறியுள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Google+ Linkedin Youtube