செவ்வாய் கிரகத்தில் புழுதி பறக்க தரையிறங்கிய ரோவர் விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆராய நாசாவால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் தரையிறங்கிய காட்சிகளை நாசா வீடியோவாக வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 30-ல் இவ்விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. 7 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பிப்., 18-ல் தரையிறங்கியது. ஜெசீரோ கிரேட்டர் எனும் 40 கி.மீ அகல பள்ளத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

அந்த 3 நிமிட வீடியோவில், செவ்வாய் கிரக வளிமண்டலத்திற்குள் பெர்சவரன்ஸ் ரோவர் நுழைந்த பின்பு நடக்கும் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. முதலில் பாராசூட் இயக்கப்பட்டு விண்கலத்தின் திசைவேகம் குறைகிறது. செவ்வாய் கிரகத்தின் தரையிலிருந்து 12 கி.மீ உயரத்தில் இருக்கின்ற போது, விண்கலத்தின் முகப்பில் பொருத்தப்பட்ட வெப்பக் கவசம் விடுவித்துக்கொள்கிறது. அதன் பிறகு கேமராவில் செவ்வாய் கிரகத்தின் சிகப்பு மண் தெரிகிறது. இது முன் சீட்டில் நாமே அமர்ந்து செவ்வாய் கிரகத்துக்குள் பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது.

திசைவேகம் மேலும் குறைந்து அலைபாய்ந்து கொண்டே கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. உயரம் 10 கி.மீ., 7.4 கி.மீ., 6.6 கி.மீ என அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். தரையை நெருங்க நெருங்க கட்டுப்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் நுனி சீட்டிற்கே வந்துவிட்டார்கள். சிகப்பு கோளின் தரையில் உள்ள மேடு பள்ளங்கள் ரோவரின் கேமராவில் தெளிவாக தெரிகின்றன. 300 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஆகாய கிரேனை இயக்கி ரோவரை கீழிறுக்குகின்றனர். அடுத்த சில நொடிகளில் அது புழுதி பறக்க செவ்வாய் கோளின் தரையை தொடுகிறது. அதை உறுதி செய்ததும் விஞ்ஞானிகள் அனைவரும் ஆரவாரம் செய்கின்றனர்.

Google+ Linkedin Youtube