'வர்மா' - இது பாலா படம் என்றால் அவரே நம்ப மாட்டார்

இந்தியில் 'கபீர் சிங்', தமிழில் 'ஆதித்யா வர்மா' என ஏற்கெனவே மாநில மொழிகளில் திரை கண்ட கதை, ஒரு சில அழுத்தமான படைப்புகளின் மூலமே உச்சம் தொட்ட இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் கண்டிப்பாக ஏற்கெனவே படம் பார்த்த பலருக்கு இருந்திருக்கும். ஆனால் இந்தப் படம் பாலாவின் இயக்கம் என்று சொன்னால் பாலாவே நம்ப மாட்டார் என்கிற அளவில்தான் வந்திருக்கிறது.

மருத்துவக் கல்லூரியில் கோபக்கார ஆனால் மிகத் திறமையான கடைசி வருட சீனியர் மாணவர் வர்மா. முதல் வருடம் சேரும் மேகாவைப் பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் வற்புறுத்தலின் பேரில் காதலிக்கும் நாயகி பின் தானாகக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

சாதியைக் காரணமாக வைத்து நாயகியின் அப்பா நாயகனை ஒதுக்கி நாயகிக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார். காதல் தோல்வியில் குடி, கஞ்சா என்று தாடி வளர்க்கும் கோபக்கார தேவதாஸாக மாறும் 'வர்மா'வின் நிலை என்ன ஆகிறது என்பதே படம்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் 'வர்மா'வில் இருக்கின்றன. அதுதான் படத்தின் பிரச்சினையும் கூட. ஏனென்றால் தெலுங்கில் 3 மணி நேரம் ஓடிய திரைப்படம், 'வர்மா'வாக 2 மணி நேரத்துக்கு 10 நிமிடங்கள் குறைவாக ஓடுகிறது. அந்த அளவுக்கு 'அர்ஜுன் ரெட்டி'யின் முக்கியமான காட்சிகளை மட்டுமே தொகுத்து அடுத்தடுத்துத் தந்திருக்கிறார்கள்.

காட்சிக்குக் காட்சி கோர்வையாக ஏதாவது சொல்ல வேண்டுமென்று வேறு வழியில்லாமல் சேர்க்கப்பட்ட விஷயங்களால் படத்துக்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டுவிடவில்லை.

துருவ், 'வர்மா'வில் ஒத்திகை பார்த்துவிட்டு 'ஆதித்யா வர்மா'வில் வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் என்னதான் கோபம் கொண்டு சத்தம் போட்டு, மிரட்டினாலும் அதையும் தாண்டி பல இடங்களில் அறிமுக நடிகருக்கான அப்பாவித்தனம் தெரிந்துவிடுகிறது. அவருக்கான பின்னணிக் குரல் கொடுத்தவருக்குப் பாராட்டுகள். அறிமுக நாயகி மேகாவுக்குப் பயந்து, ஒடுங்கி, மிரட்சியுடன் பார்க்கும் வேலை தான் படம் முழுவதும். அதைச் செவ்வனே செய்திருக்கிறார்.

அசலிலிருந்த உயிர் நண்பனின் கதாபாத்திரத்தை இங்கு கூட்டத்தில் ஒரு கதாபாத்திரத்தைப் போல மாற்றியது கை கொடுக்கவில்லை, ஏமாற்றமும் அளித்தது. ஆனால், அசலிலிருந்த பாட்டி கதாபாத்திரத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வர்மாவை வளர்த்த, வீட்டில் உரிமையுள்ள பணியாளர் கதாபாத்திரமாக வரும் ஈஸ்வரி ராவ் நடிப்பில் மிளிர்கிறார். தெலுங்கு கலந்து பேசும் வசனங்கள், உரிமையுடன் கோபிப்பது, தவறாகப் பேசுவதும் உடைந்து அழுவது என 'காலா'வுக்குப் பிறகு ஈஸ்வரி ராவ் பேர் சொல்ல ஒரு படம்.

'அர்ஜுன் ரெட்டி'யின் கருவை எடுத்து அதைத் தன் பாணியிலும் கொடுக்க முடியாமல், அசலின் பாணியிலும் கொடுக்க முடியாமல் மையமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் பாலா. அசலும், அதன் ரீமேக் வடிவங்களும் பாராட்டப்பட்டதன் காரணம் படத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறை. அது இந்த 'வர்மா'வில் எங்கும் காணக் கிடைக்கவில்லை. உண்மையில் 'வர்மா' என்ன மருத்துவர் என்பதிலிருந்தே குழப்பம் நிலவுகிறது. அனைத்து முக்கியமான காட்சிகளும் வழக்கமான கமர்ஷியல் சினிமா காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. கதாபாத்திரங்கள் மேலோட்டமாக வந்து போகின்றன.

துருவ், ஈஸ்வரி ராவைத் தாண்டி நடிகர்கள் தேர்வும், அவர்களின் நடிப்பும் சுமார் ரகமே. காட்சிகளின் அமைப்பும் நாடகத்தனமாக இருக்கின்றன. அதிலும் ஒரு குழந்தைப் பேறு காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் தொடையைத் தட்டி ரயிலை பின்னால் தள்ளிய காட்சியைத் தாண்டிய மிகை நகைச்சுவையாக இருக்கிறது.

'அர்ஜுன் ரெட்டி'யின் சூப்பர் சீன்ஸ் தொகுப்பைப் பார்க்கும் அனுபவத்தைத் தரும் 'வர்மா', ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையான படம் பார்த்த அனுபவத்தைத் தரத் தவறியிருக்கிறது. இயக்குநர் பாலாவின் வெற்றியடையாத படங்களில் கூட அவரது பாணி தனித்துத் தெரியும். ஆனால், பாலாவின் பாணி எந்த இடத்திலும் இல்லாத ஒரு பாலா திரைப்படம் 'வர்மா'.

Google+ Linkedin Youtube