திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்யும் மகளை காப்பாற்ற போராடும் தந்தையை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் குவித்து இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது.

திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம், சிங்களம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் ஆனது. சீன மொழியில் ரீமேக்கான முதல் இந்திய படம் திரிஷ்யம் ஆகும்.

7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் தற்போது இயக்கி வருகிறார். இதிலும் மோகன்லால், மீனா நடிக்கின்றனர். மகள்களாக ஹன்சிபா ஹாசன், எஸ்தர் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளோடு திரிஷ்யம் படப்பிடிப்பு நடக்கிறது என்று அவர் கூறியுள்ளார். திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் தமிழில் ரீமேக் செய்து கமல்ஹாசன் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Google+ Linkedin Youtube