தொழிலதிபரை மணக்கும் காஜல் அகர்வால்: திருமணத் தேதி அறிவிப்பு

தனக்குத் திருமணம் நடக்கவுள்ளதை நடிகை காஜல் அகர்வால் உறுதி செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாகவே காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வந்தது. ஆனால் இந்தச் செய்திகளுக்கு காஜல் அகர்வால் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடக்கவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது:

''வரும் 30 ஆம் தேதி குடும்பத்தினர் மத்தியில் கவுதம் கிச்லுவுடன் மும்பையில் எனக்குத் திருமணம் நடக்கவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெருந்தொற்றுக் காலம் எங்கள் வாழ்க்கையில் ஒரு மெல்லிய ஒளியைப் பாய்ச்சியது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்கவுள்ளோம். எங்களுக்காக நீங்கள் அனைவரும் உளப்பூர்வமாக மகிழ்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

இத்தனை ஆண்டுகளும் நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் நாங்கள் உங்களுடைய ஆசிர்வாதங்களை வேண்டுகிறோம். இப்போது புதிய தேவையுடனும் அர்த்தத்துடனும் நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்கள் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி''.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube