இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நோக்கியாவின் புதிய மாடல் ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்புகள் கடந்த ஆண்டு முதன் முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. 43 மற்றும் 65 இன்ச் மாடல்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஆண்ட்ராய்ட் இடைமுகம் கொண்டவை.

தற்போது அறிமுகமாகவுள்ள புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் 32 இன்ச் மற்றும் 50 இன்ச் ஆகிய இரு மாடல்களில் கிடைக்கும். இந்த மாடல்களுக்கு நோக்கியா நிறுவனம் ஆகஸ்ட் மாதமே இந்தியாவின் தர நிர்ணய அமைவனத்திடம் சான்றிதழ் பெற்றிருந்தது.

ஆண்ட்ராய்ட் 9.0 இடைமுகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியில் 4கே ஹெச் டி தர ஒளி அமைப்பு, நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகள் இருக்கும். அடிப்படை ஆண்ட்ராய்ட் டிவிகளுக்கான அத்தனை அம்சங்களுடனும் வரும் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியின் 32 இன்ச் மாடல் ரூ.25,000க்குள் இருக்கும் என்றும் 50 இன்ச் மாடல் ரூ.40,000க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக அறிமுகமான நோக்கியா டிவிகளில் ஜேபிஎல் நிறுவன ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் புதிய மாடல்களில், ஜப்பானின் மிகப் பழமையான தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒன்றான ஆன்க்யோவின் ஸ்பீக்கர்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube