சாம்சங்கின் புதிய எம்51: அசுரத்தனமான பேட்டரி திறனுடன் அறிமுகம்

சாம்சங் எம் வரிசை மொபைல்களில் புதிய அறிமுகமாக எம்51 என்கிற மொபைலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி திறனை மோசமான அசுரன் என்று வர்ணித்து சாம்சங் விளம்பரம் செய்துள்ளது

கேலக்ஸி எம்51 மாடலின் விலை ரூ.24,999. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவும் உள்ளது. ரூ.26,999 விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவு கிடைக்கும். செப்டம்பர் 18 முதல், அமேசான், சாம்சங் இணையதளங்களிலும், கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மொபைலோடு டைப் சி 25 வாட் அதிவேகமான சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 7000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியை 2 மணி நேரங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும்.

இந்த மாடல் பற்றிப் பேசியுள்ள சாம்சங்கின் இந்தியப் பிரிவு மூத்த துணைத் தலைவர் அசிம் வர்ஸி, "இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட எம் வரிசை மொபைல்களில் மிகவும் சக்திவாய்ந்த மாடல் இந்த கேலக்ஸி எம்51. ஸ்மார்ட்போன் துறையிலேயே முதல் முறையாக 7000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இன்னும் பல அற்புதமான அம்சங்களும் உள்ளன. மோசமான அசுரன் என்கிற விளம்பரத்துக்கு ஏற்ப கேலக்ஸி எம்51 திகழ்கிறது" என்றார்.

இந்த மொபைலில் 6.7 இன்ச் அகல தொடு திரை உள்ளது. ஸ்னாப் ட்ராகன் 730ஜி ப்ராஸஸரைக் கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார், 12 மெகா பிக்ஸல் வைட் லென்ஸ், 5 மெகா பிக்ஸல் மாக்ரோ லென்ஸ் மற்றும் 5 மெகா பிக்ஸல் டெப்த் லென்ஸ் என இதிலிருக்கும் முதன்மை கேமராவில் 4 லென்ஸ்கள் உள்ளன. முன்பக்க செல்ஃபி கேமரா 32 மெகா பிக்ஸல் திறனுடையது.

Google+ Linkedin Youtube