ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பப்ஜி விளையாட்டு

கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலிருமிருந்து பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பப்ஜி (Player Unknown’s Battle grounds -PUBG) என்கிற விளையாட்டை இனி இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்கள், ஆப்பிள் போன் பயனர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதே நேரம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்களால் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய முடியாது.

டிக் டாக் போல விபிஎன் வசதியைப் பயன்படுத்தி பப்ஜியை விளையாட முடியுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், டிக் டாக் செயலியைப் பயன்படுத்த வகை செய்யும் இரண்டு விபிஎன் நெட்வொர்க்குகளை அரசாங்கம் சமீபத்தில் தடை செய்தது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி உள்ளிட்ட 117 சீன செயலிகளுக்கு அண்மையில் தடை விதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்தான் தடைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. முன்னதாக ஜூன் மாதம், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளும், ஜூலை மாதம் 47 செயலிகளும் தடை செய்யப்பட்டன.

இதுவரை பப்ஜி, 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவிலிருந்துதான். இந்தியாவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு மிக மிகப் பிரபலம். அதுவும் இந்த கோவிட் நெருக்கடி, ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், பப்ஜிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை. அதற்குக் காரணம் இது முழுக்க சீன செயலி அல்ல. இந்த விளையாட்டை உருவாக்கி நிர்வகித்து வருவது ஒரு தென் கொரிய நிறுவனம்.

இந்த வருடம் முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube