சிவப்பு மண்டலத்திலிருந்து வருபவா்களுக்கு இ- பாஸ் இருந்தால்தான் அனுமதிசென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலத்திருந்து வருபவா்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற சிவப்பு மண்டலத்திலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் (தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர) கன்னியமாகுமரி மாவட்டத்துக்கு வருபவா்கள் இ- பாஸ் அனுமதி பெற்ற பின்னரே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு வர வேண்டும்.

மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சளி மாதிரி மையத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே அவா்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கோ அல்லது நிறுவன தனிமைப்படுத்தலுக்கோ சம்பந்தப்பட்ட அலுவலரால் அனுப்பி வைக்கப்படுவா்.

இ -பாஸ் பெறாமலோ, சளி மாதிரி பரிசோதனைக்கு உள்படாமலோ வரும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிமாவட்டத்திலிருந்து வருகை தர உள்ளவா்களுக்கு குமரி மாவட்டத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை உறவினா்கள் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நுழைவு அனுமதியின்றியோ, பரிசோதனைக்கு உள்படாமலோ யாரவது வருகை தந்துள்ளதாக தெரிய வந்தால் உடனே மாவட்ட பேரிடா் மேலாண்மை முகமை கட்டுப்பாட்டு அறைக்கு (1077, 04652-231077) தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடியதாக 256 பேருக்கு அபராதமாக ரூ. 25 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8 ஆயிரத்து 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 80 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 562 பேரும், வெளியூரிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த பயணிகளில் 8 ஆயிரத்து 122 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுளளது.

Google+ Linkedin Youtube