நிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர்

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சித்தன்புரா பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது (வயது 62).  அட்டை பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நிலநடுக்கங்களை பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

தனது சிறு வயதில் இருந்து மேகங்களை கவனிக்க தொடங்கினார்.  பொழுதுபோக்காக இதனை மேற்கொண்ட அவர் கடந்த 20 வருடங்களாக மேக கூட்டங்களின் அளவு, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து வருகிறார்.  இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு நிலநடுக்கங்கள் மற்றும் அவற்றின் அடர்த்தி ஆகியவற்றை துல்லியமுடன் கணித்து கூறுகிறார்.

இதுபற்றி அகமது கூறும்பொழுது, பூமியில் ஏற்படும் நிலநடுக்கங்களை பற்றிய தனது கணிப்புகள் அறிவியல் அடிப்படையிலானது.  ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும்பொழுது, மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தினை உருவாக்குகிறது.  இது ஒன்றும் கற்பனை கதை அல்ல.  இதனை அறிவியல்பூர்வ முறையில் என்னால் நிரூபிக்க முடியும்.

நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன், எனது கணிப்புகளை சர்வதேச பேரிடர் குறைப்பு அமைப்புக்கும் (ஐ.எஸ்.டி.ஆர்.) மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்திற்கும் இ-மெயில் வழியே அனுப்பினேன்.  ஆனால் எந்த பதிலும் இல்லை.

கடந்த 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் கடந்த 2005ம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் ஏற்பட கூடிய நிலநடுக்கங்களை பற்றியும் நான் கணித்திருக்கிறேன்.  எனது கணிப்புகளை வழக்கம்போல், சர்வதேச பேரிடர் குறைப்பு அமைப்பு, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அமைச்சகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் கூட அனுப்புகிறேன்.

ஆனால், யாரும் இதனை தீவிரமுடன் எடுத்து கொள்ளவில்லை.  என்னுடைய கணிப்புகள் உண்மையான பின்னர் கூட அவற்றை அவர்கள் கவனிக்கவில்லை என வருத்தமுடன் கூறுகிறார்.

நான் பல வருடங்களாக மேக கூட்டங்களை கவனித்ததில், நிலநடுக்கங்கள் அல்லது கனமழைக்கு முன்பு மேகங்கள் வித்தியாசமான மற்றும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தினை உருவாக்குகிறது என தெரிய வந்தது.  இதுபற்றி நன்கு ஆராய்ந்து, நிலநடுக்க சம்பவங்களுடன் எனது கணிப்புகளை பொருத்தினேன்.  அதில், எனது கணிப்புகள் சரியானவை என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.

கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சந்திர கிரகணத்திற்கு பின்னான மேகக்கூட்ட இயக்கங்களை ஆய்வு செய்ததில், டெல்லியில் வரும் நாட்களில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube