பரவுகிறது நிபா வைரஸ்.......உஷார்!!

நிபா வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் 1998ம் ஆண்டில் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிபா என்ற ஊரில்தான் இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி, அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. பன்றிகள் உள்ளிட்ட பிற விலங்குகள் மூலமும் மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும்.

இத்தகைய உயிர்கொல்லியான நிபா வைரஸ் தாக்கி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, நிபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இந்த வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரக் குழு கேரளா விரைந்துள்ளது.

வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோய் தாக்கிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Google+ Linkedin Youtube