புத்தாண்டு: நள்ளிரவில் இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

‘சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதி களின் படி இரவு நேரத்தில் கோவில்கள் திறந்து வைக்கக்கூடாது. 

இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையை திறக்க வேண்டும். கால காலமாக நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், அண்மை காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப் படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ‘இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பது என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. அதுவும், இந்து சமய அற நிலையத்துறை 
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களும் ஆகம விதிகளுக்கு எதிராக திறந்து வைக்கப்படுகிறது. கோவில்களை இரவு நேரங்களில் திறக்கக்கூடாது என்பதற்கு பல அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன’ என்று வாதிட்டார். 

அதற்கு நீதிபதிகள், புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் கோவில்களை திறப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை ஏன் தொடர்ந்துள்ளீர்கள்? எனவே, புத்தாண்டை முன்னிட்டு, இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Google+ Linkedin Youtube